மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதி பதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்த அவருக்கு பாரம்பரிய கோயில் மரியாதைகளுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு
கோயிலின் பிரம்மாண்ட மண்டபங்களின் வழியாக, சுவாமிகளை கோயில் அர்ச்சகர்களும் அதிகாரிகளும் அழைத்துச் சென்றனர். இரண்டு தங்க பதக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்பாளுக்கு, சுவாமிகள் சிறப்பு வழிபாடுகள் செய்தார்.
ஆதிசங்கரர் மீனாட்சி அம்மன் மீது பஞ்சரத்ன சுலோகம் இயற்றியதன் நினைவாக, காஞ்சி சங்கர மடம் சார்பாக மீனாட்சி அம்மனுக்கு சுவாமிகள், பஞ்சரத்ன பதக்கமும், சுவர்ண அட்டிகையும் சமர்ப்பித்தார்.
கருவறைக்கு வெளியே அமைந்துள்ள விநாயகர் சந்நிதி அருகே அனுஷ்டானங்கள் மேற்கொண்டார். தீபாராதனைக்குப் பிறகு, கோயில் நிர்வாகிகள், சுவாமிகளை கஜசாலைக்கு (யானைகள் பராமரிக்கப்படும் இடம்) அழைத்துச் சென்றனர்.
இரண்டு யானைகளுக்கு உணவளித்த பின்னர், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகளை சுவாமிகள் கவுரவித்தார்.