Cancel
திருப்பதி: திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மையங்களில் தினமும் இலவச சர்வ தரிசன (எஸ்எஸ்டி) டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதைப் பெறும் பக்தர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் பகுதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனர்.
வார இறுதியில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் கணிசமாக அதிகரிப்பது வழக்கம். இதனால் வியாழக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதன் கிழமைகளில் வழங்கப்படும் டோக்கன் விநியோகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 3 வாரங்களாக ரத்து செய்து வருகிறது.
ஆனால், இதுகுறித்த முறையான முன் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், தர்ம தரிசன டோக்கன்கள்கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, வரும் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்வதற்கான சர்வ தரிசன டோக்கன்கள், நேற்று மதியம் முதல் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.