திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று தொடங்கிய பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மனுக்கு சாற்றுவதற்காக பூ தட்டுகளை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்ற கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்கும் வைபவம் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கிய தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசிஞாயிறு தொடங்கி, பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள்நடைபெறும்.
இந்நாட்களில், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய், தீவினை அணுகாது சகல நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மரபுமாறி, அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பார்.
இதன்படி, நேற்று அதிகாலை பச்சைப் பட்டினி விரதத்தை அம்மன் தொடங்கினார். தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாகனம், வாஸ்து சாந்தி முடிந்து, காலை 6.30 மணிக்கு மேல் காலை 8 மணிக்குள் சமயபுரம் மாரியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
பின்னர் தொடங்கிய பூச்சொரிதல் விழாவில், கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில்,கோயில் பணியாளர்கள், பக்தர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கூடை கூடையாக பூக்களை யானை மீது வைத்தும், தலையில் சுமந்தும், கையில் ஏந்தியும் வந்து அம்மனுக்கு சாற்றி, வழிபட்டனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் இன்று (மார்ச் 9) அதிகாலை வரைவிடிய விடிய மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில் பூக்களை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு சாற்றினர்.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் விஎஸ்பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன் உள்ளிட்டோர் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.