குமுளி: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி மாத சித்திரை நட்சத்திரத்தில் ஒருநாள் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வழிபாடு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளதால், இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
சிறப்பு வழிபாடுகள் எதுவும் இன்றி, தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர், இரவு நடை அடைக்கப்படும். தொடர்ந்து, நாளை அதிகாலை 5.30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கும்.
காவடியார் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய்யை எடுத்து அபிஷேகம் செய்யப்படும். மதியம் பூஜை, தீபாராதனை, படிபூஜை நடைபெற்று, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் எனும் பாடலுடன் கோயில் நடை சாத்தப்படும். இதன்பின்னர், நவம்பர் 16-ம் தேதி மாலை மண்டல கால தொடர் வழிபாட்டுக்காக, கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.