ஐயப்பன் கோயில் சந்நிதானம் பகுதியில் தூய்மைப் பணி.
தேனி: மகரவிளக்கு வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிச.30) மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காக கோயில், சந்நிதானம், நீலிமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தூய்மைப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. ஐயப்பனுக்கு அணிவித்த தங்க அங்கி மீண்டும் ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் வைப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கற்பூர ஆழி அணைக்கப்பட்டு மண்டல கால சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தன.
இதனைத் தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக நாளை (டிச.30) மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து வைக்க உள்ளார். பின்பு வழிபாடுகள் இன்றி இரவு 11 மணிக்கு நடைசாத்தப்படும். தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை 3 மணி முதல் மகரகால வழிபாட்டுக்கான பூஜைகள் தொடங்கும்.
ஜன.14-ம் தேதி மாலை 6.25 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை சந்நிதானத்தில் இருந்தபடி பக்தர்கள் தரிசிப்பர். உச்ச நிகழ்வுக்கான திரு ஆபரணப்பெட்டி பாலக பருவத்தில் ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தளம் அரச குடும்பத்தினரின் அரண்மனை வளாகத்தில் இருந்து 11-ம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
அங்குள்ள சாஸ்தா கோயிலில் இருந்து கிளம்பும் இந்த புனிதபயணம் 88கிமீ.தூரத்தில் உள்ள சபரிமலைக்கு பல்வேறு திருத்தலங்கள் வழியே செல்லும். 12-ம் தேதி எருமேலியில பேட்டை துள்ளல் நடைபெறும். பின்பு பெருவழிப்பாதை, பம்பை வழியே சந்நிதானத்தை வந்தடையும். தொடர்ந்து 14-ம் தேதி மகரகாலத்தின் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு நடைசாத்தப்பட்டு மகர மாதத்துக்காக (தை) 15-ம் தேதி அதிகாலையில் நடைதிறக்கப்படும்.
19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பின்பு 20-ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசன நிகழ்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று நடைசாத்தப்பட்டு வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறும்.
நாளை கோயில் திருநடை திறக்கப்பட உள்ளதால் சந்நிதானம், பெரிய நடைப்பந்தல், நீலிமலை, சபரிபீடம், மணிமண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.