கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் பூஜை பொருட்கள் வழங்கினர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோயிலுக்கு பூஜை பொருட்கள் வழங்கியதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நாடு முழுவதும் இன்று (14-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் பூஜை பொருட்கள் வழங்கி வருவது வழக்கம்.
அதன்படி, இன்று கிருஷ்ணகிரி நகரில் சப்-ஜெயில் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில், மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி மிலாடி நபி விழாக் குழு தலைவர் அஸ்லாம் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோயிலில் பூஜை பொருட்கள் வழங்கினர். தொடர்ந்து கோயில் முன்பு இஸ்லாமியர்கள் சார்பில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இது குறித்து மிலாடி நபி குழு தலைவர் கூறும்போது, “16 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியன்று பூஜை பொருட்கள் வழங்கி வருகிறோம். நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் இணைந்து அமைதியுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், சாதி, மத வேற்றுமை இன்றி அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கோயிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது” என்றார். இந்நிகழ்வில், முன்னாள் கவுன்சிலர் காரமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.