புரி: உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேற்று கோலாகலமாக தொடங்கியது.
ஒடிசா மாநிலம் புரியில் 12ம் நூற்றாண்டு ஜெகந்நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெகந்நாதர் (மகா விஷ்ணு), பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி (ஸ்ரீ கிருஷ்ணரின் தங்கை) ஆகியோர் மூலவர்களாக அருள் பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றதாகும். இந்த வருடாந்திர ரத யாத்திரையில் ஜெகந்நாதரும் அவரது இரு உடன் பிறப்புகளும் தங்களது தேர்களில் இருந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர். ஜெகந்நாதர் தாயின் சகோதரி (சித்தி) இல்லமாக கருதப்படும் குண்டிச்சா கோயிலுக்கு அவர்கள் பயணம் செய்கின்றனர்.
ஜெகந்நாதர் கோயிலில் தொடங்கும் இந்த யாத்திரை, சுமார் 3 கி.மீ. தொலைவை கடந்து ஸ்ரீ குண்டிச்சா கோயிலில் நிறைவடைகிறது. சுவாமிகள் குண்டிச்சா கோயிலில் ஒரு வாரம் தங்கியிருந்து பிறகு ‘பஹுதா யாத்திரை' எனப்படும் விழாவின்போது, அதே தேர்களில் மீண்டும் ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலுக்குத் திரும்புவார்கள். இந்நிலையில் நிகழாண்டுக்கான ரத யாத்திரை நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்ரா தேவி ஆகிய மூர்த்திகளை கோயில் கருவறையில் இருந்து தேர்களுக்கு கொண்டு வரும் ‘பகண்டி’ சடங்கு நேற்று காலையில் தொடங்கியது. இதில் கோயிலின் சிம்ம நுழைவாயிலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் தேர்களுக்கு மூர்த்திகள் கொண்டு வரப்பட்டனர்.
இதில் முதலில் சுபத்ரா தேவியும், இதையடுத்து பால பத்திரரும், இறுதியாக ஜெகந்நாதரும் கோயிலில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேர்களில் அமர்த்தப்பட்டனர். தேர்கள் நிறுத்தப்பட்டிருந்த கிராண்ட் சாலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து இந்த நிகழ்வை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கைகளை உயர்த்தி ‘ஜெய் ஜெகந்நாதர்' என்று முழக்கமிட்டதால் கிராண்ட் ரோடு முழுவதும் பக்திப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் ஒடிசி நடனக் கலைஞர்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் மற்றும் கலாச்சாரக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ரத யாத்திரை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
முன்னதாக, முதல்வர் மோகன் சரண் மாஜி, ரத யாத்திரை ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். 19 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 13,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா டிஜிபி ஒய்.பி.குரானியா கூறினார். ஏஜ தொழில் நுட்பம் கொண்ட 473 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 2 கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கிராண்ட் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழப்பு: புரி ஜெகந்நாதர் கோயிலில் நேற்று ரத யாத்திரை தொடங்குவதற்கு முன் மூன்று மூர்த்திகளின் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேர்களுக்கு கொண்டு வரும் ‘பகண்டி’ சடங்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் ரத யாத்திரை தொடங்கிய போது தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக பக்தர்கள் முண்டியடித்துச் சென்றதால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 120 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.