புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோயில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இத்தகைய பழமையான கோயிலின் பிரம்மோற்சவ ஆண்டு விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடும், இரவு யானை, மயில், ரிஷபம், நந்தி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடந்தது.
தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மூலநாதர்-வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி, பாகூர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பாகூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். காய், பழம், பூ, மிட்டாய் உள்ளிட்டவை தேரின் மீது வீசப்பட்டது. தேர் பாகூர் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் மாலை கோயில் நிலையை அடையும்.
மேளதாளங்கள் முழங்க, சிவன், பார்வதி வேடத்தில் நடனத்துடன் தேரோட்டம் நடத்தப்பட்டது. அன்னதானம், மோர் உள்ளிட்டவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியர் சங்கர் பாபு மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.