பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருப்பத்தூர்: பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயக சதுர்த்தி விழா செப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
செப்.10-ம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை பெரிய தேரில் விநாயகர், சிறிய தேரில் சண்டீகேசுவரர் எழுந்தருளினர். மாலை 4.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சண்டீகேசுவரர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர்.
மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் அங்குசத் தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்படும். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.