மதுரை: கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதித்ததால் தேர்தலில் தோல்வியைடைந்த திமுகவின் நிலை தவெகவுக்கு வராமல் இருக்க திருப்பரங்குன்றத்தில் தீபம் எற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் மூன்று அடி பித்தளை வேல் ஒன்றை திருப்பரங்குன்றம் தீப வழக்கின் பிரதான மனுதாரரும், இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவருமான ராம.ரவிக்குமார் இன்று காணிக்கையாக செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆட்சி மேல்முறையீடு செய்தது. இதனை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதிப்படுத்தியது.
ஆனாலும் கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரார்த்தனையை வலியுறுத்தி சுப்பிரமணிய சுவாமியிடம் வேல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இந்துக்களுக்கு எதிராக பிற மதத்தினரின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக திமுக அரசு செய்ததற்கு தேர்தல் முடிவு திமுகக்கு எதிராகவே அமைந்தது .
தவெக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன் திருச்செந்தூர் சென்று தன்னை முருக பக்தனாக காண்பித்துக் கொண்டார். ஆனாலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சரான நிர்மல் குமார் தீபம் ஏற்றும் பிரச்சனையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்ன நடைமுறையோ அதைத்தான் தற்போதும் செய்வோம் என்று கூறியுள்ளார். இது ஏற்புடையது அல்ல .
சட்ட அமைச்சராக இருப்பவர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கருத்து கூறியுள்ளார். இதனால் சட்டத்துறை அமைச்சருக்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். தீபம் ஏற்றுவதற்கு தடை விதித்தவர்கள் தற்போது வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்களது நிலை தவெகவுக்கும், இந்த தொகுதியின் அமைச்சருக்கு வந்து விடக்கூடாது என்றார்.
அப்போது திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் , திருப்பரங்குன்றம் கிராம கமிட்டி வீரணன், அகில பாரத அனுமன் சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் , உதிரம் ராஜேந்திரன் , உகாதி சர்மா, மணி ஆகியோர் உடன் இருந்தனர் .