பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வியாழக்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல், பாம்பு, சூரியன், சந்திரன் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், அன்னபூரணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே தீர்த்த காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஆறாம் நாளான மார்ச் 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்.1-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று, நண்பகல் 12 மணிக்கு தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.4-ம் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.
மூன்று நாட்கள் இலவசம்: பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மார்ச் 31 முதல் ஏப்.2-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மிக மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் என்ற முன்னுரிமை இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் ஒரே வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்: தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரம் காவடி மண்டபத்தில் 14,000 பேருக்கும், கொங்கூர் காவடி மண்டபத்தில் 6,000 பேருக்கும் என தினமும் 20,000 பேருக்கு அன்னதானம் வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, திருவிழாவின் 10 நாட்களும் மொத்தமாக 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.