திருவல்லிக்கேணி 8-ம் படை வீடு திருமுருகனுக்கு 41-வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சென்னையின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான வடபழனி முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 31-ம் தேதி வரை லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்றன. ஹோமங்களும், ஆறு கால சிறப்புப் பூஜைகளும் ஆகம விதிப்படி நடத்தப்பட்டன.
முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தினமான நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, சாலிகிராமம், தசரதபுரத்தில் இருந்து திரளான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனைத் தரிசித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கோயில் பங்குனி திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது. கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள்.| படம்: ம.பிரபு |
பன்னீர் காவடி, புஷ்பக் காவடி ஏந்தி வந்த பக்தர்கள், “முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா” என எழுப்பிய பக்தி முழக்கம், அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.
விழாவின் சிறப்பம்சமாக, நேற்று இரவு 7 மணியளவில் முருகப்பெருமான் விசேஷ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று (2-ம் தேதி) முதல் 3 நாட்களுக்குத் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
இன்று வடபழனி ஆண்டவர் தெப்பத்தில் காட்சியளிக்கிறார். நாளை (3-ம் தேதி) சண்முகர் வள்ளி - தெய்வானை சமேதராக வலம் வருவார். ஏப்.4-ம் தேதி சுப்பிரமணியர் வள்ளி - தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுவார்.
இதேபோல், திருவல்லிக்கேணி எட்டாம் படை வீடு முருகன் கோயில், பாரிமுனை கந்தக்கோட்டம் உள்ளிட்ட நகரின் அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.