ஆன்மிகம்

பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7-ம் நாளான ஏப்ரல் 28-ம் தேதி திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 30) காலை நடைபெற்றது. முன்னதாக, காலை 5.30 மணிக்கு லட்சுமி, நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து, சுவாமி, அம்பாள் தேரேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு மேல் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஸ்ரீ கந்தவிலாஸ் உரிமையாளர் என்.செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர் நிலையை அடைந்த பின்பு தங்கப் பல்லக்கில் வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (மே 1) இரவு 7 மணிக்கு கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT