பஞ்சாமிர்தம் விற்பனை

 

படங்கள்: நா.தங்கரத்தினம்

ஆன்மிகம்

பழநி முருகன் கோயிலில் ஒரே நாளில் ரூ.75.53 லட்சத்துக்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகி சாதனை!

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சென்ற டிச.26-ம் தேதி ஒருநாள் மட்டும் ரூ.75.53 லட்சத்துக்கு அபிஷேக பஞ்சாமிர்தம் விற்பனையானது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 470 கிராம் டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் தினமும் 1.50 லட்சம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும்.

பஞ்சாமிர்தம் விற்பனை

தற்போது சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எந்நேரமும் பஞ்சாமிர்தம் கிடைக்கும் வகையில் தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோயில், கிரிவலப்பாதை உட்பட 15 இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு, அதிகபட்சமாக 2025 டிச.26-ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.75 லட்சத்து 53 ஆயிரத்து 780-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகி முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

பஞ்சாமிர்தம் விற்பனை

இதற்கு முன், 2023 டிச.24-ம் தேதி ரூ.72 லட்சத்து 16 ஆயிரத்து 900-க்கும், டிச.27-ம் தேதி ரூ.74 லட்சத்து 3 ஆயிரத்து 870-க்கும், 2024 ஜன.7-ம் தேதி ரூ.73 லட்சத்து 64 ஆயிரத்து 655-க்கும், 2025 நவ.20-ம் தேதி ரூ.72 லட்சத்து 16 ஆயிரத்து 180-க்கும் பஞ்சாமிர்தம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பழநி முருகன் கோயில் வரலாற்றிலேயே ஒரே ஒரு நாளில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் விற்பனையான நாட்களாக மேற்கண்ட 5 நாட்கள் இடம் பிடித்துள்ளன என்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT