பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்காக இனி 24 மணி நேரமும் அபிஷேக பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதிக்கு லட்டு என்பது போல பழநி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதுதவிர, தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 500 கிராம் எடையுள்ள பெட் ஜார் ரூ.40-க்கும், சீல்டு டின் ரூ.45-க்கும், 200 கிராம் பெட் ஜார் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் தினமும் ஒரு லட்சம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் வரை விற்பனையாகும்.
சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழநி முருகன் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கிரிவலப் பாதையில் உள்ள தேவஸ்தான பிரசாத விற்பனை மையங்களில் 24 மணி நேரமும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வின்ச் ரயில் நிலையம் எதிரில், அய்யம்புள்ளி சாலையில் உள்ள கல் மண்டபம், தேர் நிலையம் அருகில், சந்நிதி வீதியில் 2 இடங்கள், பூங்கா சாலையில் ஒரு இடத்திலும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூடுதலாக அழகுநாச்சியம்மன் கோயில் எதிரே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திலும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப சீசன் முடியும் வரை, பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைப்பதற்காக அதன் தயாரிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.