திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை (ரூ.10,500) டிக்கெட்டுகள் என அனைத்தும் ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்படுவதால், இனி அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை ஒரு பக்தன் தரிசிக்க இயலும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடையேயும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இன்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் வழங்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பக்தர், ரூ.10,000 தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கி, ரூ.500 டிக்கெட் கட்டணமாக செலுத்தி (மொத்தம் ரூ.10,500) சுவாமியை தரிசித்து வந்தனர்.
இதற்காக திருமலையில் தினமும் 800 டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில், விமான பயணிகளுக்கென 200 டிக்கெட்டுகளும் என மொத்தம் நாள் ஒன்றுக்கு 1,000 டிக்கெட்டுகளை வழங்கி வந்தது. இதற்கு பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால், இன்று (9-ம் தேதி) முதல் இதுவும் ரத்து செய்யப்பட்டு, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் தேவைப்படும் பக்தர்கள் தங்களது செல்போன் மூலம் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், அவர்களுக்கு மதியம் 2 மணிக்கு பின்னர், டிக்கெட்டுகள் செல்போன்களுக்கே அனுப்பி வைக்கப்படும். அதனை ‘பிரிண்ட்’ எடுத்து கொண்டு, அதே நாள் மாலை 4 மணிக்கு சுவாமியை தரிசிக்கலாம். இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் டிக்கெட் கிடைக்கும்.
800 பேருக்கும் மேல் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், மீதமுள்ளவர்களுக்கு டிக்கெட் கிடைக்காது. இவர்கள் மறுநாள் மீண்டும் இதேபோல் தங்களது அதிர்ஷ்டத்தை சோதித்து கொள்ள வேண்டும்.