திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவில் பல்வேறு வாகனங்களில் ரத வீதியுலா நடைபெற்று வருகிறது.நேற்று காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்பாள் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் அம்பாளுக்கு வளையல் காணிக்கை வழங்கி வழிபட்டனர். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது.
வருகிற 18-ம் தேதி காலையில் காந்திமதி அம்பாள் பல்லக்கில் வலம் வரும் வைபவம், அதைத் தொடர்ந்து பொற்றாமரை குளத்தில் அம்பாள் தீர்த்தவாரி, இரவு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு திருவிழா நடைபெறவுள்ளன.