ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம் 5-ம் நாள் விழா: கருட சேவையில் மலையப்பர் பவனி

கொட்டும் மழையிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

என். மகேஷ்குமார்

திருமலை: நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான கருட சேவை நேற்றிரவு திருமலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு திருமலையில் உள்ள வாகன மண்டபத்திலிருந்து கருட வாகனத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தியுடன் சுவாமியை வழிபட்டனர்.

மஞ்சள் ஆடை உடுத்தி, மூலவரின் தங்க காசு மாலையை அணிந்து, சங்கு, சக்கரதாரியாக கருடன் மீது மலையப்பர் கம்பீரமாக மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று காலை முதலே திருமலையில் மழை பெய்ய தொடங்கியது. ஒரு சமயத்தில் கன மழையும் பெய்தது. ஆனால் கருட சேவையின் போது லேசான மழை பெய்தது. ஆயினும் மாட வீதிகளில் திரண்ட பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல், குடைகளை பிடித்தபடி காத்திருந்து சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர்.

மாட வீதிகளில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல் வேறு மாநிலங்களை சேர்ந்த நடன குழுவினர் தங்கள் மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களை ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

வாகனத்தின் முன் ஜீயர் குழு வினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடியபடி சென்றனர். சங்கீதம், நாட்டியம், இசை என பல கலைகள் மாட வீதிகளில் அரங்கேறின. மேள தாளங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன் கருட வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT