திண்டுக்கல்: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) காலை தொடங்கியது. அக்.20-ம் தேதி சூரனை வதம் செய்யும் ‘அம்பு போடும்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (அக்.11) தொடங்கி, அக்.20-ம் தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு காலை 9.15 மணிக்கு மேல் காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
கைலாசநாதர், சோமாஸ்கந்தர், மயில் வாகனம், கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலில் உச்சி கால பூஜையில் (பகல் 12 மணிக்கு) காப்பு கட்டப்பட்டது.
மலைக்கோயிலில் போகர் ஜீவசமாதியில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலைத் தொடர்ந்து, புவனேஸ்வரி அம்மன் பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு புறப்பாடு நடைபெற்றது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.
அம்பு போடும் நிகழ்ச்சி
அக்.20-ம் தேதி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், பிற்பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.
இதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடும், மாலை 5 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
பின்னர், பழநி அடுத்துள்ள கோதைமங்கலத்தில் அம்புவிட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து, பராசக்தி வேல் மலைக்கோயிலை வந்தடைந்ததும் அர்த்த சாம பூஜையும் நடைபெற உள்ளது.