ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா: சிம்ம வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மலையப்பர் எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா களை கட்டியுள்ளது. தசரா விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பர் யோக நரசிம்மராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன சேவையில் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் பங்கேற்றன. ஜீயர்கள் குழுவினரைத் தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த 491 நடனக் கலைஞர்கள் மாட வீதிகளில் சிறப்பாக நடனமாடினர். இதில் பரத நாட்டியம், குச்சுப்புடி நடனங்கள், பக்தி சங்கீதங்கள், பல மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அனைவரையும் கவர்ந்தது.

இரவு முத்துப்பல்லக்கு வாகனம்

நேற்று இரவு முத்துப் பல்லக்கு வாகனத்தில் தேவி, பூதேவி உடன் மலையப்பர் எழுந்தருளினார். இதில், ஜீயர் குழுவினர், தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT