மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.| படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், அதிகார நந்தி சேவை நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. அதிகார நந்தி வாகனத்தில் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்தார்.
தொடர்ந்து, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்களில் பரிவார தேவதைகள் உலா வந்தனர். தொடர்ந்து, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
30-ல் அறுபத்து மூவர் விழாபங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் 29-ம் தேதியும், அறுபத்து மூவர் விழா 30-ம் தேதியும் நடைபெற உள்ளன.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை செய்யும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.