கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். (உள்படம்) ராஜகோபுர கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள்.
கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘கும்பேஸ்வரா கும்பேஸ்வரா’ என முழக்கமிட்டனர்.
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சைவ கோயில்களில் முதன்மையானது மங்களாம்பிகா உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த நவ.27-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்நிலையில், 8 கால யாகசாலை பூஜைகளுக்குப் பின், நேற்று அதிகாலை 5 மணிக்கு பரிவார பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடாகி, சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சிவவாத்தியங்கள் இசைக்க, காலை 6.38 மணிக்கு மூலவர், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கும்பேஸ்வரா... கும்பேஸ்வரா’ என விண்ணதிர முழக்கமிட்டனர். பின்னர் கலசங்களுக்கு மகா தீபம் காட்டப்பட்டது.
காஞ்சி பீடாதிபதி பங்கேற்பு: விழாவில், காஞ்சி காமகோடி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், மந்த்ராலய மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
31 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) 31 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை 3,896 கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள நிலையில் ஜனவரிக்குள் 4 ஆயிரத்தை கடக்கும்.
மேலும், 1,059 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,119 கோடி மதிப்புள்ள 8,022.48 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சுவாமி மலை கோயிலில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.