ஆன்மிகம்

சமரச சுத்த சன்மார்க்க பேரணி - கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு!

வெற்றி மயிலோன்

சென்னை: அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக சமரச சுத்த சன்மார்க்க பேரணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அருட்பெருஞ்சோதி வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெறும் அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக இன்று (15.02.2026) மாநாட்டு வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஜோதியை ஏற்றி வைத்து, சமரச சுத்த சன்மார்க்க கொடியை ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து, சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகில் 2,000 சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்ற சமரச சுத்த சன்மார்க்க பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

          

அனைத்துலக வள்ளலார் மாநாடு இன்று சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் மைதானத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை“ என பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையையும், வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் ரூ.12.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை மற்றும் பக்தர்கள் தங்கும் 3 விடுதிகளையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, சன்மார்க்கிகளுக்கு விருதுகளை வழங்கி விழா பேருரையாற்றினார்.

முன்னதாக, அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்த பேரணி, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கீழ்ப்பாக்கம் விழா அரங்கினை வந்தடைந்தது.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச்சந்திரன், இணை ஆணையர் எ.டி. பரஞ்சோதி, வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் அருள் நாகலிங்கம், பொது செயலாளர் கி. வெற்றிவேல், செயல் அலுவலர் ராஜா சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT