கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி |
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர ||
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! |
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் ||
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற |
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் ||
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம் |
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
அதிகாலை நேரத்தில் எருமைகள் பால் சொரிந்து ஆண்டாளின் தோழியின் வீட்டு வாசல் பாற்குளம் போல் ஆனது. ஆங்காங்கே சேறாகக் காட்சியளித்தது. இதனால் அவளது வீட்டுக்குள் தோழிகளால் நுழைய முடியவில்லை. அங்கிருந்தபடியே, “பனியில் உன் வீட்டு வாசலில் நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். ராமாவதாரம் எடுத்த கோமானாகிய திருமாலின் பெருமையைப் பாடுகிறோம்.
ஆயர்பாடியில் அனைவரும் எழுந்துவிட்ட பிறகும், உனக்கும் மட்டும் ஏன் இந்த உறக்கம்?” என்று கேட்கின்றனர். மேலும், ‘பால்குளத்தால் குளிர்ச்சி, பனியால் குளிர்ச்சி. இதையும் தாண்டி இறைவனை அடைய அதிகாலையில் எழுந்து அவன் பெருமைகளை கூறி மகிழ்வோம்’ என்று உறங்கும் தோழியை தோழிகள் எழுப்புகின்றனர்.
சிவநாமத்தை எப்போதும் உச்சரித்து மகிழ்வோம்!
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் |
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் ||
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் |
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி |
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் |
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப ||
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் |
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை)
தோழிகளே! இப்போது நமக்கு வாய்த்துள்ள பிறவித் துன்பத்தை இனி வராமல் தடுக்க வேண்டும். அதற்கு நாம் ஈசனை வழிபட வேண்டும். ‘ஓம் நமசிவாய’ என்று அவன் நாமத்தைச் சொல்ல வேண்டும். கங்கையை தலையில் கொண்டவன், தில்லையில் கையில் தீயை வைத்துக் கொண்டு நடனமாடும் கூத்தன், வானம், பூமி என அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் தன்மை கொண்டவன் நம் இறைவன்.
நம் கைகளில் உள்ள வளையல்கள் ஒலி எழுப்பி, இடுப்பில் உள்ள ஆபரணங்கள் பேரொலி எழுப்பி, திருக்குளத்தில் நீந்தி மகிழ்ந்து, நாம் அவனது பொற்பாதத்தை வணங்க வேண்டும் என்று தோழிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதாக இப்பாடலில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.