ஆன்மிகம்

உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..! | மார்கழி மகா உற்சவம்

கே.சுந்தரராமன்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, |

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் ||

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; |

மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ||

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? |

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ||

’மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று |

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை )

எவ்வித தோஷமும் இன்றி, தரமான மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் விளக்குகள் ஒளிர அழகிய தூபம் மணக்க, சப்பர மஞ்சத்தில் ஒய்யாரமாக உறங்கிக் கொண்டிருக்கும் மாமன் மகளே.. உடனே எழுந்து வந்து மணிக்கதவை திறக்க மாட்டாயா? மாமீ! உன் மகள் என்ன ஊமையா? செவிடா? மயங்கிக் கிடக்கிறாளா? அல்லது ஏதேனும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறாளா? எம்பெருமானின் திருநாமங்கள் பலவற்றைக் கூறி அவரை தரிசிக்கச் செல்லலாம் என்று கூறியும், அவள் உறக்கத்தில் இருந்து எழவில்லையே? உன் தோழிகள் வந்துள்ளனர் என்று அவளிடம் சொல்லி அவளை எழுப்ப வேண்டும் என்று தோழியின் தாயாரிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.

சிவபக்தியால் மன நிம்மதி கிடைக்கும்!

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே |

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே ||

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் |

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம் ||

அன்னவரே எம் கணவர் ஆவார் |

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம் ||

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல் |

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். ||

(திருவெம்பாவை)

பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானவர் சிவபெருமான். பல லட்சம் ஆண்டுகள் கழித்து இருக்கும் உலகம் போன்று புதுமையானவர் இறைவன். உங்களை தலைவராகக் கொண்ட நாங்கள் உங்கள் அடியார்களுக்கு மட்டுமே அடிபணிந்து தொண்டு புரிவோம். உங்கள் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு மணாளனாக வர வேண்டும்.

இந்த பிரார்த்தனையை நீங்கள் ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு குறை என்பதே இருக்காது. செல்வத்தை அதிகமாக வைத்திருப்பவர்களால் எங்களுக்கு நிம்மதியைத் தர முடியாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையும். அவர்களால் மட்டுமே எங்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தர முடியும் என்று தோழியை எழுப்ப வந்த தோழியர், ஈசனிடம் வேண்டுகின்றனர்.

SCROLL FOR NEXT