ஆன்மிகம்

உள்ளம் நிறைந்த பக்தியுடன் பாடுவோம்! | மார்கழி மகா உற்சவம்

கே.சுந்தரராமன்

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து |

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! ||

காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து |

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ||

ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? |

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி ||

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? |

தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை)

அதிகாலை நேரத்தை உணர்த்தும் விதமாக ஆனைச்சாத்தன் குருவிகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கிவிட்டன. நெய் மணம் வீசும் கூந்தலை உடைய ஆயர் குலப் பெண்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலி, அச்சுத் தாலி ஆகியன ‘கல கல’ என்று ஒலி எழுப்புகின்றன.

அவர்கள் தங்கள் கைகளை அசைத்து மத்தால் தயிர் கடைவதால் ‘சல சல’ சத்தமும் கேட்கிறது. இவையெல்லாம் உன் காதில் விழவில்லையா? இறைவன் நம்மிடம் வேண்டுவது தூய உள்ளம், உள்ளம் நிறைந்த பக்தியைத்தான். உடனே வந்து கதவைத் திற என்று தன் தோழியை நீராட அழைக்கிறாள் ஆண்டாள்.

இனியவன் ஈசனை போற்றுவோம்!

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர் |

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் ||

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் |

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் ||

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் |

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ ||

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் |

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். ||

(திருவெம்பாவை)

தாயைப் போன்று தயை உடைய பெண்ணே! உன்னிடம் இருக்கும் சிறப்புத் தன்மையில் இந்த உறக்கமும் ஒன்று போல் தெரிகிறது. ஈசனுக்கு உரிய திருநீறு, உருத்திராக்கம் முதலானவற்றை அணிந்தவர்களைக் கண்டதும், ‘சிவ சிவ’ என்று கூறுவாயே! அவனது நாமத்தைக் கேட்டதும் தீயில் பட்ட மெழுகைப் போல் உருகுவாயே! சிவபெருமான் எமக்கு உரியவன் என்று நாங்கள் புகழ்வதைக் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே! பெண்களின் நெஞ்சம் இறுக்கமாக இருக்கக் கூடாது.

நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே என்று கூறி தோழியை சிவதரிசனம் பெற தோழியர் அழைக்கின்றனர். அதிகாலையில் எழுந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்று இங்கு அறிவுறுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT