குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் |
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் ||
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் |
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; ||
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை |
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், ||
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், |
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
கோதையின் தோழிகள், தங்கள் தோழிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்களை மார்கழி நீராடவும், கண்ணனின் புகழைப் பாடி மகிழவும் அழைக்கின்றனர். நப்பின்னையை அழைக்க அரண்மனைக்கு வந்துள்ளனர்.
“யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில், மிக மென்மையான துயிலணையின் மேல், தலையில் நறுமண மலர்களை அணிந்து உறங்கிக் கொண்டிருக்கும் தாயே! கண்ணன் எப்போதும் உன்னருகே இருக்கிறான் என்பதால் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறாய். நாங்கள் அவன் புகழ்பாடி அவனருள் பெற வந்துள்ளோம். அவனது நல்வாக்கைக் கேட்க ஆவலாக உள்ளோம். எங்கள் மீது கருணை கொண்டு நீ கண்ணனை எழுப்ப வேண்டும்” என்று நப்பின்னையிடம் கூறுகின்றனர்.
சிவபெருமானை வேண்டினால் துன்பம் இல்லை...!
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று |
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால் ||
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் |
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க ||
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க |
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க ||
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் |
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை)
பண்டைய காலத்தில் தங்களுக்கு, எப்படிப்பட்ட மணவாளன் அமைய வேண்டும் என்று கேட்கும் உரிமை பெண்களுக்கு இருந்துள்ளது. அதனால்தான் அவர்கள், தங்களுக்கு சிவபக்தன் கணவராக வர வேண்டும் என்று ஈசனிடம் வேண்டுகின்றனர். இதன் காரணமாக சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்களால் தங்களுக்கு துன்பம் ஏதும் ஏற்படாது என்று முழுமையாக நம்புகின்றனர்.
சிவபெருமானுக்கு தொண்டு புரியும் அடியார்கள் மட்டுமே தங்கள் கண்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும், பிற தீமைகள் ஏதும் தங்கள் பார்வையில் படக்கூடாது என்றும் ஈசனை வேண்டுகின்றனர். இறைவனைமீது முழு நம்பிக்கை கொண்டவர்களுக்கு நவக்கிரகங்களின் தாக்குதல் அறவே இருக்காது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.