ஆன்மிகம்

கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவோம்..! | மார்கழி மகா உற்சவம்

கே.சுந்தரராமன்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய |

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண ||

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; |

ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை ||

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; |

தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான் ||

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ |

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை)

ஆண்டாளின் தோழிகள், தங்கள் தோழிகளின் இல்லங்களுக்குச் சென்று, பாவை நோன்பு நோற்க, ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைக்கின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து நந்தகோபனுடைய திருமாளிகைக்கு வரும்போது, வாயிற்கதவு மூடியிருப்பதைப் பார்க்கின்றனர்.

உடனே அங்கிருக்கும் வாயிற்காப்போனைப் பார்த்து, “ஆயர்பாடியின் தலைவனான நந்தகோபனுடைய அரண்மனையையும் அதன் வாயிலையும் காப்பவனே! எங்கள் நோன்பின் பயனைத் தருவதாக நேற்றே கண்ணன் உறுதியளித்துள்ளான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பறை வழங்குவதாகவும் கூறியுள்ளான். கண்ணனை துயில் எழுப்பி திருப்பள்ளியெழுச்சி பாடி அந்தப் பறையை பெற்றுக் கொள்ளவே நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது கருணை கொண்டு, உடனே இந்த மணிக்கதவின் தாளைத் திறந்துவிடுவாய்” என்று தோழிகள் வேண்டுகின்றனர்.

இயற்கையை மதித்து நடப்போம்..!

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் |

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் ||

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் |

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் ||

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் |

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு ||

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே |

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் ||

(திருவெம்பாவை)

கடல்நீர் முழுவதையும் அருந்திவிட்டு மேகங்கள் மேலே சென்றுவிட்டன. இவை, சிவபெருமானுக்கு பிரியமான பார்வதி தேவியைப் போன்று கருமை நிறத்தில் காணப்படுகின்றன. அனைவரையும் ஆளும் அம்பிகையின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. அவள் திருவடியில் உள்ள பொற்சிலம்புகளின் ஒலி போல் இடி முழக்கத்தின் ஒலி கேட்கிறது.

அவளது புருவம் போல் வானவில் தற்போது தோன்றியுள்ளது. நம் மனதை ஆளும் ஈஸ்வரி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கும் அருள்மழை போல் மழையே..! நீ விடாமல் பெய்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் இயற்கையையும் அம்பிகையையும் (அறிவியல், ஆன்மிகம்) மதித்து நடக்க வேண்டும் என்பதை மாணிக்கவாசகர் வலியுறுத்துகிறார்.

SCROLL FOR NEXT