எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? |
சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்; ||
வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் |
வல்லீர்கள் நீங்களே, நான்தான் ஆயிடுக, ||
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை? |
எல்லாரும் போந்தாரோ? ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ ||
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க |
வல்லானை, மாயானைப் பாடேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
ஆண்டாளின் தோழியர், உறங்கும் தோழியை பலமுறை கூப்பிட்டும் அவள் வரவில்லை. இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தோழிகள் உறங்கும் தோழியைப் பார்த்து, “ஏலே எங்கள் தோழியே! இளமைக் கிளியே! நாங்கள் உனக்காக காத்திருக்கும் அளவுக்கு உன்னிடம் என்ன சிறப்பு இருக்கிறது? இவ்வளவு அழைத்தும் இன்னும் எழுந்து வரவில்லையே?” என்று கடுமையாகப் பேசுகின்றனர்.
அதற்கு அந்த தோழி, “கோபித்துக் கொள்ளாதீர்கள். கடும் குளிர்தான் என்னை எழவிடாமல் தடுக்கிறது” என்கிறாள். உடனே தோழிகள், “குவலயாபீடம் யானையை அழித்தவனும், எதிரிகளை விரட்டும் திறன் கொண்டவனுமாகிய மாயக் கண்ணனை வணங்கி மகிழ உடனே வா” என்று தோழியை அழைக்கின்றனர்.
சிவபக்தியில் திளைத்து மகிழ்வோம்..!
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் |
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர ||
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப |
பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள் ||
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும் |
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் ||
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி |
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை)
“அழகிய மார்புக் கச்சை, ஆபரணங்கள் அணிந்த பெண்களே! நம் தோழி எந்த நேரமும் ஈசனையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவரது சிறப்புகளைப் பற்றி பேசும்போது, அவளது கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகும். அந்த பக்தி உலகில் இருந்து அவளால் இவ்வுலகுக்கு மீண்டும் வர முடியாத நிலை இருக்கும். நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் ஈசனை, அவளைப் போலவே புகழ்ந்து பாடுவோம்.
மலர்கள் சூழ்ந்த குளத்தில் நீராடி மகிழ்வோம்” என்று தோழிகள் தங்கள் தோழியின் சிவபக்தியைப் பற்றி கூறுகின்றனர். மாணிக்கவாசகர் சிவலோகத்துக்குச் சென்று, தன்னை நந்திதேவராக பாவித்து, அங்கு தங்கியிருந்ததாக கற்பனை செய்து பாடிய பாடல் இதுவாகும்.