திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனங்களில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளையுடன் (செப்.23) சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த வருடாந்திர பிரம்மோற்சவம், தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் பல வாகன சேவைகள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. இதில் முக்கியமாக கருட சேவைக்கு பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை தரிசித்தனர்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய நாராயணன் அலங்காரத்தில் சூரிய பிரபையில் மலையப்பர் எழுந்தருளினார். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷமிட்டவாறு மலையப்பரை தரிசித்தனர். வாகன சேவையில் ஜெர்மனியில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்கள் 20 பேர் வெகு சிறப்பாக நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர்.
மலையப்பர், நேற்றிரவு சந்திர பிரபையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதிலும் மாட வீதியில் திரளான பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் மலையப்பர் கல்கி அலங்காரத்தில் எழுந்தருள உள்ளார்.