சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்.
சென்னை: கோடம்பாக்கம் தீர்க்கபுரீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் புலியூர் வன்னியர் தெருவில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
மகா சிவராத்திரி நாளான நேற்று காலை மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், ஏகாதசி ருத்ர பாராயணம், மகா அபிஷேகம், ருத்ர ஹோமம், வசோத்ரா ஹோமம், பூர்ணாஹுதி, ஏகாதச ருத்ராபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, நான்குகால அபிஷேகம், சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 27-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சப்தகன்னி வழிபாடு, கபாலி பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளை தரிசனம் செய்தனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள பாலவிநாயகர், முருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன. | கோடம்பாக்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
வடபழனி முருகன் கோயிலில் நேற்று இரவு முதல்கால பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பூஜைகள் நடைபெற்றன. மேலும், இசை நிகழ்ச்சிகள், பஜனைகளும் நடைபெற்றன.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் கங்கா தீர்த்தம், உத்திராட்சை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றன.
இதேபோல, திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி, பாடி திருவல்லீஸ்வரர், வேளச்சேரி தண்டீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உட்பட சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்களில் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தி பாடல்கள், பரதநாட்டியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து ‘நமச்சிவாய’ முழக்கத்துடன் சிவனை வழிபட்டனர்.