மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வீரவசந்தராயர் மண்டபம்.

 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் ஆக.30-ல் திறப்பு

8 ஆண்டுகளாக நடைபெற்ற சீரமைப்புப் பணி நிறைவு

செய்திப்பிரிவு

மதுரை: தீ விபத்​தில் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் வீர​வசந்​த​ராயர் மண்​டபப் பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் ஆக. 30-ம் தேதி திறக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் கிழக்கு கோபுர வாசல் அருகே வீர​வசந்​த​ராயர் மண்​டபத்​திலிருந்த கடைகளில் 2018 பிப். 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் வீர​வசந்​த​ராயர் மண்​டபம் முழு​மை​யாக சேதமடைந்​தது. அப்​போதைய அதி​முக ஆட்​சி​யில் ரூ.18.10 கோடி​யில் மண்​டபத்தை சீரமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

நாமக்​கல் மாவட்​டம் ராசிபுரம் வட்​டம் பட்​ட​ணம் கிராமத்​தில் உள்ள கல் குவாரி​யில் இருந்து கற்​களை வெட்டி எடுக்க முடி​வெடுக்​கப்​பட்​டது. அங்​கிருந்​து, கோயிலுக்கு சொந்​த​மான மதுரை கூடல்​செங்​குளம் பண்​ணை​யில் வைத்து 79 தூண்​கள், போதி​யல், சிம்​மம், உத்​திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்​டம், தூண்​கள், பாவுக்​கற்​கள் மற்​றும் இதர அணி​கலன்​களை வடிவ​மைத்து பொருத்​தும் பணியை மேற்​கொள்ள ஏற்​பாடு​கள் நடந்​தன.

ஆனால், கரோனா ஊரடங்​கு, ஒப்​பந்​தம் விடு​வ​தில் ஏற்​பட்ட தாமதம் போன்ற காரணங்​களால் பணி​கள் தள்​ளிப்​போனது. பின்பு கற்​களை வெட்டி எடுக்​கும் பணிக்​கான தொடக்க விழா 2020 செப்​டம்​பரில் நடந்​தது. அப்​போது, கற்​களை வெட்டி எடுக்க அப்​பகு​தி​யினர் எதிர்ப்பு தெரி​வித்து உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​த​தால் மீண்​டும் தாமதம் ஏற்​பட்​டது. வழக்​கில் கோயிலுக்கு சாதக​மாக தீர்ப்பு கிடைத்​த​தால் கற்​கள் வெ்ட்டி எடுக்கும் பணி தொடங்​கியது.

கரோனா 2-வது அலை காரண​மாக பட்​ட​ணம் கிராமத்​தில் கல்​கு​வாரி​யில் கற்​களை வெட்டி எடுக்​கும் பணி மீண்​டும் தடைப்​பட்​டது. 2021-ல் திமுக ஆட்​சிக்கு வந்​த​போது வீர​வசந்​த​ராயர் மண்​டபம் சீரமைப்பு பணிக்​கான புதிய மதிப்​பீடு தயாரிக்​கப்​பட்​டது. அதன்​படி, ரூ38.30 கோடி​யில் மண்​டபத்தை கட்ட முடிவு செய்​யப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்​து 2021 ஜூலை​யில் இருந்து வெட்டி எடுக்​கப்​பட்ட கற்​களை செதுக்​கும் பணி கோயிலுக்கு சொந்​த​மான கூடல் செங்​குளம் பண்​ணை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. திருப்​பூர் திரு​முரு​கன்​பூண்டி ஸ்த​பதி வி.பி.வேல்​முரு​கன் மூலம் கற்​களை வடிவ​மைத்துப் பொருத்​தும் பணி​கள் நடை​பெற்று வந்​தன.

2026-ல் தவெக ஆட்​சிக்கு வந்த நிலை​யில், மண்​டப சீரமைப்புப் பணி​கள் துரிதப்​படுத்​தப்​பட்​டன. கடந்த ஜூன் 18-ம் தேதி இந்த மண்​டபத்​துக்​கான 79 தூண்​களை​யும் நிறு​வும் பணி நிறைவு​பெற்​றது. பின்​னர், மேற்​கூரை உள்​ளிட்ட பிற பணி​கள் நடை​பெற்​றன. 8 ஆண்​டு​களுக்குப் பிறகு மண்​டபப் பணி​கள் தற்​போது முழு​மை​யாக நிறைவடைந்​துள்​ளன.

வரும் செப். 17-ம் தேதி கோயி​லில் குட​முழுக்கு விழா நடை​பெறவுள்ள நிலை​யில், அதற்கு முன்​பாக ஆக. 30-ம் தேதியே வீர​வசந்​த​ராயர் மண்​டபத்தைத் திறக்க கோயில் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதற்கு பக்​தர்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT