மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமன்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையப் புள்ளியாகத் திகழ்கிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலின் குடமுழுக்கு விழா 2021-ல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.
தொடர்ந்து கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதியில் குடமுழுக்கை நடத்த ரூ.28 கோடி மதிப்பில் கோயிலின் 12 கோபுரங்களுக்கும் வண்ணம் பூசும் பணிகள், சேதமடைந்த சுதைச் சிற்பங்களைச் சீரமைப்பது உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோயிலுக்குள் வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.6-ல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. செப்.11-ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜைகள் தொடங்கி 6-ம் நாளான நேற்று செப்.16-ம் தேதி காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
காலை 6 மணிக்குள் தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் சுற்றுக் கொடி மரங்கள் உட்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கோயிலில் உள்ள 4 கோபுரங்கள் உட்பட 12 கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் சாற்றப்பட்டன.
இன்று (செப்.17) காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெறும். பின்பு கலசங்கள் புறப்பாடாகி காலை 7.40 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரக் கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெறும். 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்குக் குடமுழுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு நடைபெறும்.
குடமுழுக்கில் பங்கேற்க 3 ஆயிரம் உபயதாரர்கள், பொது மக்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்குக் குலுக்கல் முறையில் பாஸ் உட்பட 11 ஆயிரம் பேருக்குப் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கோயிலின் மேல்தளத்தில் 9 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்விழாவில் பல்வேறு மடங்களின் ஆதீனங்கள், அமைச்சர்கள் ரமேஷ் (அறநிலையத் துறை), நிர்மல் குமார் (சட்டத் துறை), பெ.விஸ்வநாதன் (உயர் கல்வி) மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீஸாருடன் மூன்றடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள், 12 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் 70 மருத்துவர்கள் மற்றும் 150 துணை மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.
மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உட்பட அத்தியாவசிய தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில் சார்பில் மஞ்சள், குங்குமம், விபூதி, தண்ணீர், பிஸ்கட் அடங்கிய 2 லட்சம் பிரசாதப் பைகள் வழங்கப்படுகின்றன.
பக்தர்கள் நெரிசலின்றி குடமுழுக்கைக் காணும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பார்க்கிங் பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் 51 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்யப்படுகின்றன. அனைத்துத் துறைப் பணிகளையும் ஒருங்கிணைக்க புதுமண்டபத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. 1800-425-6781 மற்றும் 1800-425-6782 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.