படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று காலையில் 7.35 மணியளவில் ராஜ கோபுரங்கள், அம்மன் சுவாமி தங்க விமானங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோயிலின் மேல்தளத்தில் அனுமதிக்கப்பட்ட 11 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சங்க காலம் முதல் இருந்து வரும் பிரசித்திபெற்ற கோயிலாகும். ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கொருமுறை குடமுழுக்குநடத்த வேண்டும். கடந்த 2009 ஏப்.8-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. அதன்படி 2021-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடானது.
இதனிடையே 2018-ம் ஆண்டு பி்ப்.2-ம் தேதி வீரவசந்தராயர் மண்டபத்திலுள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மண்டபம் முழுவதும் சேதமடைந்தது. பின்பு வீரவசந்தராயர் மண்டபப் பணிகளை சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்த அப்போதைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.
வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புப் பணிகள் ரூ.35 கோடியில் திருப்பணிகள் நிறைவடைந்து கயந்த ஆக.30-ல் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து வீரவசந்தராயர் மண்டபம் திறக்கப்பட்டது. இதனால் 8 ஆண்டுகளாக வீரவசந்தராயர் மண்டபப் பணிக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு கோபுர வாசலும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில், கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதியில் குடமுழுக்கை நடத்த ரூ.28 கோடி மதிப்பில் கோயில் 12 கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள், சேதமடைந்த சுதை சிற்பங்களை சீரமைக்கும் திருப்பணிகளும் நடந்தன. இதில் கடந்தாண்டே செப்.17-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 17 ஆண்டுகளுக்கு பின்பு செப்.17-ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
அதனையொட்டி கோயிலுக்குள் வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.11-ம் தேதி மாலையிலிருந்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டுள்ளன.
செப்.16-ம் தேதி காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 6 மணிக்குள் தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் சுற்றுக்கொடி மரங்கள் உட்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்குவிழா நடைபெற்றது.
முக்கிய விழாவான இன்று செப்.17-ம் தேதி காலை 4 மணிமுதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. பின்பு 6 மணியளவில் கலசங்கள் புறப்பாடானது.
காலை 7.35 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
7.40 மணியளவில் தீபாராதனை நடைபெற்றது.. 7.50 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு குடமுழுக்கும், காலை 8.00 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கு குடமுழுக்கும் நடைபெற்றது.
இதில் 3 ஆயிரம் உபயதாரர்கள், பொதுமக்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் பாஸ் உட்பட 11 ஆயிரம் பேருக்கு பாஸ்கள் வழங்கப்பட்ட பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் கோயிலிலிருந்து வெளியேறி சித்திரை வீதிகள் வழியாக செல்லும் வரையில் சித்திரை வீதிகளில் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விழாவில் அமைச்சர்கள் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன். உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்றனர் தருமை ஆதினம் உட்பட பல ஆதீனங்கள் பங்கேற்றனர்.