மீனாட்சி அம்மனின் தங்கக் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. வெளிநாடு மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 2022-ல் நடத்தப்பட வேண்டிய குடமுழுக்கு வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பிக்கும் பணி மற்றும் பெருந்தொற்று காரணங்களால் தள்ளிப்போனது. இதைத் தொடர்ந்து 2026-ல் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயில் நிதி ரூ.15.40 கோடியில் 86 திருப்பணிகள், உபயதாரர்கள் நிதி ரூ.16.89 கோடியில் 100 திருப்பணிகள் உட்பட மொத்தம் ரூ.32.29 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில் செப்.17-ல் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் தொடங்கின.
அதன்படி மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.11-ம் தேதி மாலையில் இருந்து முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டன. செப்.16-ம் தேதி பத்தாம் கால யாக வேள்வி முடிந்து தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் சுற்றுக்கொடி மரங்கள் உட்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்றுமுன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. பின்பு 6 மணியளவில் கலசங்கள் கோபுரங்களுக்குப் புறப்பாடானது. காலை 7.35 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
காலை 7.50 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், காலை 8.00 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் உபயதாரர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள், 2 ஆயிரம் பக்தர்கள் உட்பட 11 ஆயிரம் பேர் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவ்விழாவில், தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், சீ.ரமேஷ், பெ.விஸ்வநாதன், வி.சம்பத்குமார், கு.ஜெகதீஸ்வரி, வே.க.ராஜீவ், அரசுச் செயலர் வி.ராஜாராமன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி.வினய், ஆட்சியர் நிஷாந்த்கிருஷ்ணா, பொறுப்பு அலுவலர்கள் வீரராகவ ராவ், மதுசூதன் ரெட்டி, மாநகராட்சி ஆணையர் கவுரவ் குமார், மதுரை ஆவின் பொது மேலாளர் முத்துமாதவன், அறங்காவலர் குழுத் தலைவர் மு.ருக்மணி பழனிவேல் ராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் (பொறுப்பு) நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் முழுவதும் நேற்று அதிகாலை 12 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வெளியூர் பக்தர்கள் வந்து செல்வதற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சித்திரை வீதிகளில் நுழைய அனுமதிக்காதது, புனித நீர் தெளிக்க விரிவான ஏற்பாடு செய்யாதது குறித்து அமைச்சர் நிர்மல் குமாரிடம் பக்தர்கள் கேள்வி எழுப்பினர். அசம்பாவிதம் இல்லாமல் பாதுகாப்பாகக் கும்பாபிஷேகம் நடத்த முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அமைச்சர் பதில் அளித்தார். குடமுழுக்கு விழாவை மிகச்சிறப்பாக நடத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.