படம்: ந.தங்கரத்தினம்

 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமரிசையாக தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

விழாவின் பத்தாம் நாளான நேற்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் 11ம் நாளான இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனும், பிரியாவிடை சுந்தரேஸ்வரரும் காலை 8 மணி அளவில் கோயிலில் இருந்து புறப்பாடாகி கீழமாசி வீதியில் தேரடி பகுதியில் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் பிரியாவிடை சுந்தரேசுவரர், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

காலை 6.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஹர ஹர சங்கர மீனாட்சி சுந்தரர்’ என்ற பக்தி முழக்கத்தோடு சுவாமி, அம்மன் தேர்களை வடம்பிடித்து இழுக்க தொடங்கினர். சிவ பக்தர்கள் ருத்ராட்சையால் ஆன சிவ லிங்கத்தை தோளில் சுமந்தபடியும், பெண் பக்தர்கள் கயிலாய வாத்தியங்கள், சங்குகளை ஊதியபடியும் திருத்தேரின் முன்பாக சென்றனர்

சுவாமி, அம்மனின் திருத்தேர்களானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வருகிறது. இதன் காரணமாக மாசி வீதிகள் முழுவதும் பல்லாயியரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில், மதுரை மாநகர காவல்துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீருடை அணியாத காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மாசி வீதிகளில் உயரமாக செல்லும் மின்வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT