மதுரை சித்திரைத் திருவிழாவில் புதூர் பகுதியில் நேற்று நடைபெற்ற எதிர் சேவையில் கள்ளழகரைக் காண குவிந்த பக்தர்கள். (உள்படம்) கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்த சுந்தரராஜ பெருமாள். படங்கள்: என்.தங்கரத்தினம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று அதிகாலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 27-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக நேற்று முன்தினம் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டார். அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
பின்னர், புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலக்காரர் மண்டகப்படிகளில் எழுந்தருளி இரவு 8.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு கள்ளழகர் வந்தடைந்தார்.
அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டார். இன்று (மே 1) அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அங்கிருந்து வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவ பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வரவேற்க, அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். `கோவிந்தா.. கோவிந்தா..' என்ற கோஷம் முழங்க பக்திப் பெருக்குடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர், காலை 7.25 மணியளவில் வையாளியாகி வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றிவிட்டு அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்படுகிறார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விப்பார்கள். இன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார். நாளை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.
மே 3-ல் ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் செல்கிறார். மே 4-ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணியளவில் அழகர் கோயிலை சென்றடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
7,500 போலீஸார் பாதுகாப்பு: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதையொட்டி தல்லாகுளம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், வைகை வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீட்சித் மேற்பார்வையில் மொத்தம் 7,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்