ஆன்மிகம்

சபரிமலை மண்டல கால வழிபாடு தொடங்கியது: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை மண்டல காலத்தின் முதல் நாளாக இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை பழைய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆழிக்குண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் புதிய நம்பூதிரிகள் பதினெட்டாம்படி வழியே சென்று பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து எவ்வித வழிபாடும் இன்றி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில் மண்டல காலத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி தாமோதரன் நடைதிறந்து வைத்தார். தொடர்ந்து நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மண்டல காலம் தொடங்கியதை தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.

நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அரசுப் பேருந்து மூலம் சென்று பம்பையில் நீராடி தொடர்ந்து நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சத்திரம், எரிமேலி உள்ளிட்ட வனப் பாதைகளில் காலையில் பக்தர்கள் நடந்து செல்ல திறந்து விடப்பட்டது. இந்தப் பாதை வழியே பக்தர்கள் ஆர்வருடன் பாத யாத்திரை ஆக சந்நிதானத்தை நோக்கி ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT