ஆன்மிகம்

மாசி மகத்தையொட்டி கும்பகோணம் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: மார்ச் 2-ல் 3 கோயில்களில் தேரோட்டம்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் மாசி மகத்தையொட்டி கொடியேற்றம் பிப்.22-ம் தேதி நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகாமக விழாவும், ஆண்டுக்கு ஒரு முறை மாசி மக விழாவும் நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டு சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 கோயில்களில் கொடியேற்றம் பிப்.22-ம் தேதி நடைபெற்றது.

          

அந்தக் கோயில்களில் உள்ள கொடி மரத்திற்குச் மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது கொடி மரத்தின் முன் சக்கரபாணி கோயிலில் விஜயவல்லி-சுதர்சனவல்லி தாயார்கள் உடனாய  சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமலவல்லித் உடனாய ராஜகோபால சுவாமி,
ஆதிவராக பெருமாள் கோயிலில் அம்புஜவல்லி உடனாய  ஆதிவராகப் பெருமாள் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர்.

தொடர்ந்து, மார்ச் 1- ம் தேதி  வரை தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறும். வரும் மார்ச் 2-ம் தேதி சக்கரபாணி, ராஜகோபாலசாமி ஆதிவராக பெருமாள் ஆகிய 3   கோயில்களில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதே போல் சாரங்கபாணி சுவாமி கோயிலில் வரும் மார்ச் 2-ம் தேதி பொற்றாமரை குளத்தில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT