கோப்புப் படம்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, வரும் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவு மகிஷாசூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா விழா, அக்.11-ம் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை கொடிப்பட்டம் ஊர்வலமாக யானை மீது எடுத்து வரப்பட்டு, 5 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. பின்னர், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மஞ்சள் காப்பு அணிவிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
கொடியேற்றத்தன்று இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து 19-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 20-ம் தேதி நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு உருவங்களில் வரும் மகிஷாசூரனை வதம் செய்கிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.