குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வேடமணிந்து ஆவேசமாக கோயிலுக்குள் ஓடிவந்த பக்தர். படங்கள்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்று நள்ளிரவில் மகிஷாசூர சம்ஹாரம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி, பல்வேறு வேடங்கள் அணிந்து, ஊர் ஊராகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். தினமும் இரவு 10 மணிக்கு மேல் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவியத் தொடங்கினர்.
முத்தாரம்மனுக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10.30 மணிக்கு மகாஅபிஷேகமும் நடைபெற்றது. இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்குமேல் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளிய அம்மன், பல்வேறு உருவங்களில் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார்.
அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘தாயே முத்தாரம்மா’, ‘ஓம் காளி, ஜெய்காளி’, ‘வெற்றி அம்மனுக்கே’ என விண்ணதிர முழக்கமிட்டனர். பின்னர் கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தசரா குழுவினர் விடிய விடிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியதால் குலசேகரன்பட்டினம் களைகட்டியிருந்தது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத் தலைமையில் 4 எஸ்பிக்கள், 14 ஏடிஎஸ்பிக்கள், 47 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 3,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (அக்.21) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வே.கண்ணன், இணை ஆணையர் தி.சு.ரோஜாலி சுமதா, உதவி ஆணையர் ரா.ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் மு.வள்ளிநாயகம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.