காவடி எடுத்து வழிபாடு

 
ஆன்மிகம்

பழநிக்கு காவடிகளுடன் காரைக்குடி நகரத்தார் பாதயாத்திரை: முன்னோர் வழியில் 420 ஆண்டுகளாக பயணம்!

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடி நகரத்தாரின் 420 வருட பாரம்பரிய காவடி இன்று காலை நத்தம் வந்தடைந்தது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இருந்து கடந்த 26-ம் தேதி 352 காவடிகளுடன் நகரத்தார் பழநி நோக்கி புறப்பட்டனர். 420 ஆண்டுகளாக தொடர்ந்து பழநியில் நடைபெறும் தைப்பூசவிழாவிற்கு குன்றக்குடியில் இருந்து காவடியை சுமந்து பாதயாத்திரையாக பழநி நோக்கி செல்வது வழக்கம்.

அவர்தம் முன்னோரின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி பகுதிகளை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர். இதையடுத்து 352 காவடிகளுடன் கடந்த 26-ம் தேதி பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.

          

நத்தம் மாரியம்மன்கோயில் அருகேயுள்ள காவடி மண்டபத்திற்கு நேற்று இரவு வந்தடைந்தனர். இன்று புதன்கிழமை (ஜன.,28) காலையில் மகேஸ்வரபூஜை நடத்தினர். தொடர்ந்து காவடி சிந்து பாடப்பட்டது. இதையடுத்து பழநி நோக்கி தங்கள் பாதயாத்திரையை இன்று காலை தொடங்கினர். நத்தம் மாரியம்மன் கோயிலில் தொடங்கிய காவடியை பொது மக்கள் வழிநெடுகிலும் நின்று வணங்கி வழியனுப்பினர்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநியை சென்றடையும் இவர்கள் பிப்ரவரி 1-ம் தேதி பழநியில் நடைபெறவுள்ள தைப்பூச விழாவில் பங்கேற்று முருகனுக்கு காவடியை செலுத்தி வழிபடவுள்ளனர். பழநியில் நகரத்தார் காவடி குழுவினர் சுவாமி தரிசனம் செய்த பிறகு நடந்தே ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT