திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது | சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
சென்னை / திருப்போரூர்: கந்தசஷ்டி விழா சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் 6 நாள் விரதத்தைத் தொடங்கினர்.
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி விழா கடந்த 9-ம் தேதி மாலை வரசித்தி விநாயகர் புறப்பாட்டுடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்வான லட்சார்ச்சனை நேற்று காலை 8 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
இதையொட்டி, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள் முருகப் பெருமானின் திருநாமங்கள், மந்திரங்களை முழங்கி மலர்களால் அர்ச்சனை செய்தனர். நிறைவாக தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, திருமணம், தொழில் முன்னேற்றம், உடல்நலம் உள்ளிட்ட வேண்டுதல்களை முன்வைத்து ஏராளமான பக்தர்கள் ரூ.250 கட்டணச் சீட்டு பெற்று, தங்களது பெயர், நட்சத்திரம், ராசி உள்ளிட்ட விவரங்களை வழங்கி அர்ச்சனையில் பங்கேற்றனர்.
இரவு 8 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (நவ.11) சந்திரபிரபை, நாளை (நவ.12) ஆட்டுக்கிடா, 13-ம் தேதி நாக வாகனம், 14-ம் தேதி மங்களகிரி விமானம் ஆகிய வாகனங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி வீதி உலா வருகிறார்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி நடைபெற்று வரும் யாகசாலை பூஜைகள் 15-ம் தேதி உச்சிக்கால பூர்ணா ஹுதியுடன் நிறைவடைகின்றன. பல்வேறு சிறப்பு வைபவங்களுடன் தொடர்ந்து நடைபெறும் கந்தசஷ்டி விழா 20-ம் தேதி அருணகிரிநாதர் புறப்பாட்டுடன் நிறைவடைகிறது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் அறுபடைவீடு முருகன் கோயில், கந்தக்கோட்டம், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், குமரக்கோட்டம், குன்றத்தூர், குமரன் குன்றம், சிறுவாபுரி, வல்லக்கோட்டை உட்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருப்போரூர் கந்தசாமி கோயில்
புகழ்பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்றான திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. காலை 5.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, கோயில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றினர்.
இதையடுத்து பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி கொடிமரத்தைச் சுற்றி வந்து 6 நாள் விரதத்தைத் தொடங்கினர். விழாவை ஒட்டி தினமும் இரவு முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
கந்தசஷ்டி விழாவை ஒட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த திருப்போரூர் முருகப்பெருமான்.
நேற்று கிளி வாகனத்திலும், இன்று (நவ.11) ஆட்டுக்கிடா வாகனத்திலும், 12-ம் தேதி புருஷா மிருகவாகனத்திலும், 13-ம் தேதி பூத வாகனத்திலும், 14-ம் தேதி வெள்ளி அன்னவாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.
அப்போது வெள்ளிக் குதிரைவாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான், தங்க வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார். தொடர்ந்து இரவு தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலாநடைபெறும்.
மறுநாள் 16-ம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகின்றன. கந்தசஷ்டி விழாவையொட்டி கோயிலில் தினமும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
இதற்கு கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
திருத்தணி, சிறுவாபுரி
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. விழாவையொட்டி தினமும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. வரும் 15-ம் தேதி மாலை முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 16-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.
இதேபோல சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றிலும் கந்தசஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை வணங்கிச் சென்றனர்.