ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) சந்நிதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது.
108 வைணவ திவ்ய உத்தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர், மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. ஸ்ரீவில்லிபுத்தூர் வராக ஷேத்திரம் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராக அவதாரத்தின்போது வராகப் பெருமாள் பூமாதேவிக்கு அருளியது வராக புராணம்.
வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவான் கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி உள்ளிட்ட சில வைணவ திருத்தலங்களில் கைசிக ஏகாதசி உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அன்று குளிர்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பெருமாள் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 போர்வை சாற்றப்பட்டு, கைசிக புராணம் வாசிக்கப்படும்.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு பெரிய பெருமாள் சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் மண்டபத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர்.
கைசிக ஏகாதசி அன்று மட்டும் கருடாழ்வார் சந்நிதியிலிருந்து புறப்பாடாகி பகல் பத்து மண்டபம் எழுந்தருள்வார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு செவ்வாய்க் கிழமை காலை 4 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு ஒவ்வொன்றாக 108 போர்வைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அரையர் பாலமுகுந்தனின் அரையர் வியாக்ஞானமும், வேதபிரான் பட்டர் சுதர்சனன் கைசிகபுராணம் வாசித்தார். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.