ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் பிரம்மா, சூரியன், துர்வாசர் பூசித்தது, அகத்தியர் மேன்மை பெற்றது. மிளகு பயிரானது, சந்திரனுக்கு சய நோய் தீர்த்தது, திருநடனம் புரிந்தது உட்பட சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்ற ஸ்தலம் என்ற பெருமை கொண்டதாகும்.
இங்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வழிபட்டதாலும், மடவார் வளாகம் வந்து வழிபடுபவர்களுக்கு சிவன் வீடு பேறு அளிப்பதால் இத்தலம் கைலாயத்திற்கு இணையானதாக கருதப்படுகிறது. கோயிலில் கொடி மரம் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் சிவனின் 24 திருவிளையாடல்களும் மூலிகை சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது.
இக்கோயிலில் மூலவர் வைத்தியநாத சுவாமியின் மீது புரட்டாசி 1-ம் நாள் மற்றும் பங்குனி 1-ம் நாளில் சூரிய ஒளி படும் அதிசயம் நிகழ்கிறது. இக்கோயில் பிரம்ம கைவர்த்த புராணத்தில் புதுவைத் தலத்தை முக்தி தரும் க்ஷேத்திரம் என்று குறிப்பிட்டுள்ளது.
வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என 5 தேர் இழுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள் ஆகிய இரு தேர்கள் மட்டுமே இழுக்கப்படுகிறது. அந்த இரு தேர்களும் 200 ஆண்டு பழமை என்பதால் அவையும் சேதமடைந்தன. இதற்கு பதிலாக புதிய தேர் செய்ய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.
உபயதாரர் நிதியில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தேர் செய்யும் பணி அன்மையில் நடைபெற்றது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
காலை 8 மணி தொடங்கிய தேர் வெள்ளோட்டம் 10.20 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனிடையே, வைகாசி திருவிழாவில் மே 29-ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருப்பதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.