சென்னை: குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் ‘குருவாயூர் ஏகாதசி’ உற்சவம் இன்று தொடங்குகிறது.
மலையாள ஆண்டில் விருச்சிக மாதம் (கார்த்திகை) வளர்பிறை ஏகாதசி திதி மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. புராணப்படி அன்றுதான் குருக் ஷேத்திர போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மத் பகவத் கீதையை உபதேசித்தார் என்பது ஐதீகம்.
அதேநாளில்தான் ஸ்ரீ மத் நாராயணீயம் இயற்றிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரிக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் காட்சி கொடுத்தாகக் கூறப்படுகிறது. இதே நாளில் 1976-ல் குருவாயூர் கோயிலின் தனித்துவம் பெற்ற ‘கேசவன்’ எனும் யானை இறைவன் திருவடியை அடைந்தது. இதையொட்டி, கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டுதோறும் ‘குருவாயூர் ஏகாதசி’ உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு குருவாயூர் ஏகாதசி உற்சவம் இன்று தொடங்குகிறது. தினமும் இரவில் சொர்ண கோலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் எழுந்தருளும் சிறப்பு சீவேலி புறப்பாடும், நெய் விளக்கு ஏற்றமும் நடைபெறும். 21-ம் தேதி ஏகாதசி தினத்தில் சிறப்பு பூஜை, சடங்குகள், அலங்காரம் நடைபெறும்.
மறுநாள் 22-ம் தேதி துவாதசி திதியில் ‘துவாதசி அர்ப்பணம்’ நிகழ்வு நடைபெறும். மேற்படி பூஜைகள், சடங்குகள் யாவும் கோயிலின் தந்திரி பி.சி.தினேசன் நம்பூதிரிபாட், மேல்சாந்தி பி.எம்.சதீசன் வழிகாட்டுதல்படி நடக்கும். ஏகாதசி உற்சவத்தையொட்டி குருவாயூருக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டி தலைவர் ஏ.வி.கோபிநாத் தலைமையிலான கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.