குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். (உள்படம்) குரு பகவான்.
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப் பெயர்ச்சி விழா இன்று (மே 26) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், குரு பகவான் தனி சந்நிதியில் எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது, குரு பகவான் சந்நிதியில் பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (மே 26) குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு முற்பகல் 11 மணிக்கு பெயர்ச்சி யாகிறார்.
இதையொட்டி, சந்நிதியில் குருப் பெயர்ச்சி நடைபெறும் நேரத்தில் குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படும். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
குருப் பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பரிகார பூஜைகளும் நடைபெறும்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் வரிசையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆலங்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.