ஆன்மிகம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழாவுக்கான கால் நாட்டு விழா கடந்த மாதம் 23-ம் தேதி நடந்தது. தொடர்ந்து 25-ம் தேதி அதிகாலை திருவிழா கொடியேற்றம் நடந்தது. அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டது.

விழாவில், தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

காலை 6 மணிக்கு மேல் உற்சவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் சக்தி பராசக்தி” என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. 11-ம் நாளான 4-ம் தேதி பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

அன்றிரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 12-ம் நாளான 5-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) ந.காந்திமதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT