சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. படம்: பிடிஐ

 
ஆன்மிகம்

சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு

நாளை மண்டல பூஜை வழிபாடு கோலாகலம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து வழிபாட்டின்முக்கிய நிகழ்வாக நாளை மண்டல பூஜை கோலாகலமாக நடைபெறுகிறது. இரவு வழிபாட்டுக்குப் பிறகு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மண்டல பூஜை நாளை நடைபெற உள்ளது. அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதற்காக தங்க கவச அங்கி கடந்த 23-ம் தேதி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது. தங்க அங்கிசபரிமலை நோக்கி வருவதை வரவேற்கும் விதமாக சந்நிதானத்தில் இரவு நேரங்களில் கற்பூர ஜோதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்: இன்று சாலக்காயம் வழியாக பிற்பகல் ஒரு மணிக்கு பம்பைக்கு தங்க அங்கி வர உள்ளது. பின்பு கணபதி கோயிலில் வழிபாட்டுக்குப் பிறகு மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக நீலிமலை வழியே கொண்டு செல்லப்படும்.நிலக்கல், பம்பை வழியே தங்கஅங்கி ஊர்வலம் செல்ல உள்ளதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று பிற்பகலில் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் கடந்து சென்ற பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதேபோல் இன்று 30 ஆயிரம் முன்பதிவு பக்தர்களுக்கும், நாளை 35 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் இன்றும், நாளையும் ஸ்பாட் புக்கிங் மூலம் தலா 2 ஆயிரம் பேருக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை சந்நிதானம் வரும் தங்க அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொள்வர். பின்பு 18-ம் படி வழியே கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பவிக்கிரகத்தில் அணிவிக்கப்படும். தொடர்ந்து இரவு 10.45-க்கு அங்கி களையப்பட்டு நடை சாத்தப்பட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். நாளை காலை 10.15 மணிக்கு மீண்டும் அங்கி அணிவிக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அன்று முழுவதும் தங்க அங்கியுடன் கூடிய ஐயப்பனை பக்தர்களை தரிசிக்கலாம். பின்பு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் எனும் தாலாட்டுப் பாடலுடன் கோயில் நடை சாத்தப்படும். இத்துடன் மண்டல கால வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைகின் றன. பின்பு மகரவிளக்கு வழிபாட்டுக்காக மீண்டும் டிச.30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT