சபரிமலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய கூட்டுப்படை பிரிவு சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு.

 
ஆன்மிகம்

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அமல் - முழு விவரம்

என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நெரிசலற்ற தரிசனத்துக்காகவும் கூட்டுப் படைப்பி ரிவுகள் சார்பில் நேற்று அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இன்று இரவு வரை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் பல்வேறு துணை ராணுவப் படைகள் சார்பில் நேற்று முதல் கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி சந்நிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவத்தின் பல்வேறு படை பிரிவுகள் சபரிமலைக்கு வந்துள்ளன.

இன்று (டிச.6) வரை கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பான தரிசனத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டு படைபிரிவுகள் சார்பில் நேற்று அணிவகுப்பு நடைபெற்றது. சந்நிதானம், பெரிய நடை பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் படைப் பிரிவினர் ஊர்வலமாகச் சென்றனர்.

இதுகுறித்து சந்நிதானம் காவல் துறை சிறப்பு அதிகாரி ஆர். குமார் கூறுகையில், இன்று (சனிக்கிழமை) இரவு வரை தீவிர கண்காணிப்பும், சோத னையும் தொடரும். பொதுவாக நடை சாத்தப்பட்ட பிறகு மாளிகைப்புரம், மணிமண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

ஆனால் இன்று ஒருநாள் மட்டும் இரவு நடை சாத்தியபிறகு பதினெட்டாம்படிக்கு மேல் பகுதியின் எந்த இடத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் நடை பந்தல் மற்றும் வரிசையில் காத்திருக்கலாம்.

ஆனால் நாளை ஞாயிறு) காலையிலேயே பதினெடடாம் படி ஏற அனுமதிக்கப்படுவர். திருமுற்றம் மற்றும் சந்நிதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதலாக 10 ஆயிரம்: சபரிமலையில் தினமும் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதனால், பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் தங்களுக்கு தேவைப்படும் தரிசன தேதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெற உள்ளது.

அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதற்கான மண்டல வழிபாடுகள் கடந்த 17-ம் தேதி தொடங்கின. தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதை விட கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்பேரில், ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால், நெரிசல் படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜனவரி 10-ம் தேதி வரை முடிந்துவிட்டன.

இதனால், பயணத்தை முன்னதாக திட்டமிடாத பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து, ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தேவசம் போர்டு மற்றும் போலீஸார் சார்பில் பல்வேறு விதங்களிலும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நெரிசல் குறைந்துள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

இதற்காக, தேவசம் போர்டு இணையதளத்தில் இம்மாதம் 7-ம் தேதியிலிருந்து 25-ம் தேி வரையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 10-ம் தேதி வரையும் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் புக்கிங் செய்து வருவதால், இம்மாத கடைசி தேதிகள் வரை நிறைவடைந்துவிட்டன. தேவசம் போர்டின் இந்த திடீர் சலுகையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT